Thursday, March 21, 2013

இளைஞன் ஒருத்தரால் இவ்வளவும் முடியுமா?

ஆலங்குளம் விவசாயியின் ஒருங்கிணைந்த விவசாயம் :இயற்கை விவசாயம் 
இளைஞன் ஒருத்தரால் இவ்வளவும் முடியுமா அதும் நம்மூரில் என்று வியக்கும் வண்ணம் வந்தது இந்த தினமணி கட்டுரை. கொஞ்சம் பழசுதான். இருந்தாலும் படிக்கலாம்.

காலங்காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளே விவசாய தொழிலைக் குறைத்து வரும் சூழலில், 31 வயதே நிரம்பிய பட்டதாரி இளைஞர் ஒருவர் விவசாயம் செய்து வருவதுடன்,விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தும், கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். விவசாயமும், நாட்டுப்புறக்கலையும் எனது இரண்டு கண்கள் எனக் கூறும் அவர், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்த ஆறுமுகம். எம்.ஏ, எம்.பில் பட்டதாரியான அவரை நேரில் சந்தித்த போது..

விவசாயம் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
இந்தியாவின் அடிப்படை ஆதாரமான தொழிலே விவசாயம் தான்.அந்த விவசாயத்தை நாம் ஏன் செய்யக்கூடாது எனப் பள்ளி பருவத்திலே ஆர்வம் ஏற்பட்டது.அதற்கு எனது தாய் சொர்ணம் மற்றும் எனது கல்லூரி பேராசிரியர் மகாதேவன் ஆகியோர் தூண்டுதலாக இருந்தனர். இதன் மூலம் 1999-லே விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். புதுமையான தொழில் நுட்பத்துடன் விவசாயம் செய்ய மாவட்ட உழவர் பயிற்சிமைய அலுவலர்களும், கால்நடை ஆராய்ச்சி நிலைய அலுவலர்களும் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 5 ஏக்கரிலும், திருநெல்வேலி அருகே உள்ள தென்பத்து பகுதியில் 1 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறேன்.நெல்,உளுந்து, எள், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைப் பயிர்செய்கின்றேன். கால்நடைகளும் வளர்த்து வருகிறேன்.

விவசாய தொழிலை என்ன முறையில் செய்கிறீர்கள்?
நான் இயற்கை உரங்களான
மண்புழுஉரம்,
பசுந்தாள்உரம்,
மாட்டுச்சாணம்,
இலைவழி உரமான மண்புழுகுளிகைநீர்,
பல்உயிர்பெருக்க கரைசல்கள்,
தானிய கரைசல்கள்
போன்றவைகளைத்தான் உரமாக பயன்படுத்துகிறேன். பயிர்களுக்கு மருந்தாக
கத்தாழை,
எருக்கம்இலை,
ஊமத்தை இலை,
நொச்சி இலை,
வசம்பு
போன்றவைகளை கரைசலாக தயார் செய்து மூலிகை பூச்சி விரட்டிகளாக பயன்படுத்தி வருகிறேன்.இயற்கை உரம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டிகள் அனைத்துமே நானே தயாரித்து பயன்படுத்துகிறேன்.
நான் விவசாயத்தில் இறங்கிய முதல் மூன்று ஆண்டுகள் நஷ்டம் அடைந்தாலும், தற்போது லாபம் கிடைக்கும் அளவிற்கு வளர்த்து கொண்டேன்.

விவசாயம் செய்ய நீங்கள் பெற்ற பயிற்சிகள் என்னென்ன??
திருநெல்வேலி உழவர் பயிற்சி நிலையம் மூலமாக
இயற்கைவழி விவசாய பயிற்சி,
விவசாயத்தில் புதிய தொழில்நுட்ப பயிற்சி,
வேளாண் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி,
மண் பரிசோதனை பயிற்சி ஆகிய பயிற்சிகளும்,
ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில்
ஆடு,கறவைமாடு, வெண்பன்றி, கோழி, காடை, வான்கோழி வளர்ப்புகள் குறித்த பயிற்சியும்,
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில்
காளான் வளர்ப்பு பயிற்சியும்,
தென்காசியில்
பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சியும்,
மதுரையில்
நீர் மேலாண்மை குறித்த பயிற்சியும்
பெற்றேன்.தொடர்ந்து டெல்லி பூசா அக்ரி யுனிவர்சிட்டியில் நடைபெற்ற விவசாய பயிற்சி மற்றும் கண்காட்சியிலும், கர்நாடக மாநிலம் மாண்டியா அக்ரி யுனிவர்சிட்டியில் விதை உற்பத்திசெய்தல் உள்ளிட்ட பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். நான் கற்றவற்றை எங்கள் பகுதி விவசாயிகளுக்கும், மகளிர்குழுக்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். பள்ளி மாணவர்களின் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன்.

விவசாயம் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியது பற்றி..?
2005 ல் தஞ்சாவூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், நிலத்தடிநீரை பற்றி ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன். இதற்கு மாநில அளவில் ஆறுதல்பரிசு கிடைத்தது.
2006ல் சிக்கிமில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் இயக்க மாநாட்டில் மண்புழு உரமும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன். அதற்கு தேசிய அளவில் முதல்பரிசு கிடைத்தது.
தொடர்ந்து தென் இந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மண்புழு உரமும் அசோலா நவகவ்யம் என்ற தலைப்பிலும், மண்புழு உரமும் மண் புழு குளிகை நீரும் என்றை தலைப்பிலும் ஆராய்ச்சிகட்டுரைகள் சமர்ப்பித்து மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளேன்.
விவசாயம் தொடர்பான இதர செயல்பாடுகள் குறித்து..?

கைகுத்தல் அரிசி தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன்.எங்கள் பகுதி விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்ய ஆலோசனை வழங்கி செய்தும் வருகிறேன். என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாடுவது இல்லை. நான் வளர்க்கும் கால்நடைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்களின் பெயர்களை சூட்டி மகிழ்வதுடன், அந்த கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் பிறந்தநாள்விழா கொண்டாடி வருகிறேன். சங்கமம் மண்புழு உர உற்பத்தி கூடம் என வைத்து அதில் 20 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறேன். ஆடு மற்றும் கரவை மாடுகள் வளர்ப்பதோடு, வீட்டில் காகம், பூனை, வெள்ளை எலி உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறேன்.

கலைப்பணி குறித்து..?
சலங்கைஒலி என்னும் கலைக்குழு வைத்துள்ளேன். இதன் மூலம் கரகம், காவடி, ஒயிலாட்டம், கும்மி, தீச்சட்டிநடனம், காளிநடனம், பறைஆட்டம், கோலாட்டம், சக்கைகுச்சிஆட்டம், சுடலைமாடன் நடனம் போன்றவை செய்து வருகிறேன். புதிதாக ஆண்கள் குழுக்கள், மகளிர்குழுக்கள் உருவாக்கி, அவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பேச்சுகலை, நடனக்கலை உள்ளிட்ட கலைபயிற்சியும் அளித்து வருகிறேன்.

பெற்ற விருதுகள் பற்றி…?
ரத்ததானம் வழங்குதல், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட சமூக பணிகள் செய்துள்ள எனக்கு, ரோட்டரி கிளப் சார்பில், சிறந்த கிராமத்து இளைஞர் விருதும்,தொண்டு நிறுவனங்கள் சார்பில் கலைஜீவன்,கலைஞாயிறு, நாடகக் கலை செல்வர் ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன. 2002 ல் சிறந்த உழவர் மன்ற அமைப்பாளர் விருதை பெற்றேன்.

உங்களை மனதைப் பாதிக்கிற விவசாயம்?
நான் எம்.ஏ. எம்.பில் படித்திருந்தாலும், என் தொழில் விவசாயம் என்ற ஒரே காரணத்திற்காக எனக்குப் பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள். இதைத்தவிர தற்போது வேறொரு பிரச்னையும் இல்லை.

நன்றி : http://velanarangam.wordpress.com/

1 comment:

  1. நல்ல பகிர்வு...

    நல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி...

    ReplyDelete